கொல்லிமலை அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலை அருவிகளில் குளிக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக, கொல்லிமலையில் மழை இல்லாத காரணத்தால், அருவிகளில் தண்ணீர் வரத்து நின்று போனது. கொல்லிமலையில் கடும் வறட்சி நிலவி வந்தது. வாடி வதங்கிய மூங்கில் மரங்கள், பல்வேறு இடங்களில் தானாக தீப்பிடித்து எரிந்த சம்பவமும் நடைபெற்றது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

மழையின் காரணமாக குளுமையான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. காய்ந்த மரங்கள் மீண்டும் துளிர் விட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சிறுவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, கொல்லிமலையில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இப்போது மழை குறைந்து விட்டதால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகியவற்றில் தண்ணீர் இதமாக கொட்டுகிறது. இதன் காரணமாக, நேற்று தடை விலக்கப்பட்டு, கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வார விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொல்லிமலை அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: