கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி.அணை, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை, ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை மற்றும் சின்னாறு அணை, பாரூர் பெரிய ஏரி ஆகியவை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளம் குட்டைகள், கிணறுகள் நிரம்பின.

இதனால் நிலத்தடி நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. வறண்டு போயிருந்த கிணறுகளில் கூட தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால், விவசாயத்தை விட்டு அண்டைய மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வந்து, தங்களது நிலத்தை சீர்செய்து பயிரிட்டனர்.இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் இல்லாமல், பயிர்கள் காய்ந்தன. கடும் வெயிலால் மாவட்டத்தில் உள்ள மா மரங்கள் காய்ந்தன. மாம்பிஞ்சுகள் உதிர்ந்தன. எப்போதும் இல்லாத அளவிற்கு மா விளைச்சல் 80 சதவீதம் குறைந்தது.

மாமரங்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி, மாஞ்செடிகளுக்கு ஊற்றினர். இந்த நிலை நீடித்தால், மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களிலும் தண்ணீர் வற்றி, விவசாயம் செய்ய இயலாதோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்துவங்கியது. இதனால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன மரங்கள், பயிர்கள் கூட துளிர்விட ஆரம்பித்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணைக்கு சுமார் 45 நாட்கள் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றிருந்த நிலையில், கோடை மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில், கடந்த 14ம் தேதி 38.40 அடி தண்ணீர் இருந்தது. அன்று இரவு பெய்த கனமழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1126 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6.05 அடி உயர்ந்து, தற்போது அணையின் மொத்த உயரமான 52 அடியில் 44.45 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அணையின் நீரை நம்பி, கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 14 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு தண்ணீர் வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: