வத்திராயிருப்பு அத்திகோயிலில் மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானைகள்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அத்திக்கோயில் பகுதியில் மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் 50க்கும் மேற்பட்ட மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு யானை, புலி, காட்டுமாடு, காட்டுப்பன்றி, மிளா மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இம்மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மா சீசன் நேரத்தில் மலையடிவார தோப்பிற்குள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அத்திகோயில் பகுதியில் செந்தில்குமார் என்பவர் சுமார் 6 ஏக்கரில் மா விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 4 நாட்களாக மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி இறங்கும் காட்டு யானைகள் செந்தில்குமாரின் தோப்பிற்குள் புகுந்து மாங்காய்களை சாப்பிடுவதுடன், மரங்களை வேரோடு பிடுங்கியும், கிளைகளை ஒடித்தும் சேதப்படுத்தி வருகிறது. செந்தில்குமார் தோப்பு மற்றும் அருகிலுள்ள தோப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாமரங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வனத்துறையினர் தோப்பிற்குள் யானைகள் வருவதை தடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும்,
தோப்பை சுற்றி மின்வேலிகள் அமைக்க அரசு மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வத்திராயிருப்பு அத்திகோயிலில் மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: