ஏலகிரி அடுத்த கொட்டையூரில் உள்ள சோதனை சாவடியில் 2ம் தவணை செலுத்தாதவர்களுக்கு கட்டாய தடுப்பூசி-ஊராட்சி நிர்வாகம் அதிரடி

ஜோலார்பேட்டை : ஏலகிரி அடுத்த கொட்டையூர் சோதனை சாவடி மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை இனம் கண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்படுகிறது. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிறப்பு முகாம்கள் மூலம் அனைவருக்கும் தடுப் பூசி செலுத்தி வருகிறது. அதன்படி ஏலகிரி மலையில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது.

மேலும், சுற்றுலாத் தலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வருபவர்களினால், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், கொட்டையூர் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சோதனை சாவடி அமைத்து சுகாதாரத்துறையினருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வருபவர்களை இனம் கண்டு  அவர்களுக்கு கட்டாயாமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ஏலகிரி மலையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சோதனை சாவடி மையத்தில் ஊராட்சி நிர்வாகமும், சுகாதார துறையினரும் இணைந்து சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை இனம் கண்டு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

Related Stories: