சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  

அன்றைய தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக  அவர் பதவி வகித்து வருகிறார். குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை தீர்த்து வைத்துள்ளார். விளம்பரத்திற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யும் சில வழக்கறிஞர்கள் உள்பட 10 க்கும் மேற்பட்ட மனுதாரர்களை எச்சரித்துள்ளார். சிலர் வழக்கு தொடரவும் தடை விதித்துள்ளார். நோயாளிகளிடம் மருத்துவர் விசாரிப்பது போல் நீதிமன்றத்தில் செயல்படுவார். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அகற்றுவதில் எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாத நீதிபதி.  

இந்த நிலையில் பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முனீஸ்வர் நாத் பண்டாரியை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் அவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவுப்பாணை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: