கிருமாம்பாக்கம் அருகே சாலையில் கட்டியிருந்த பேனரில் பைக் மோதி வாலிபர் பலி-மற்றொருவர் படுகாயம்

பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே சாலையில் கட்டப்பட்டிருந்த பேனர் கட்டையில் பைக் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வார்க்கால்ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் ஆகாஷ் (20). பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் (18) என்பவருடன், மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றார். கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பைக் சாலையோரம் விளம்பர பேனர் கட்டப்பட்டிருந்த மரக்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆகாஷ் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

பனுக்கு கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, ஆகாஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: