சித்தூரில் செயற்குழு கூட்டம் ஜெகன்மோகன் ஆட்சியில் டிராக்டர் மணல் ₹4,500க்கு விற்பனை-தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு

சித்தூர் : சித்தூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் ஒரு டிராக்டர் மணல் ₹4,500க்கு விற்பனை செய்யபடுவதாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார். சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நானி தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. சர்வாதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஜெகன்மோகன் அவரது ஆதரவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகிறார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு ஒரு நலத்திட்ட பணிகள் கூட செய்வதில்லை. முன்னாள் முதல்வர் சந்திரபாபு இலவசமாக மணல் வழங்கனார். ஆனால், முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் ஒரு டிராக்டர் மணல் ₹4,500க்கு விற்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தமிழகம், கர்நாடகா மாநிலங்களுக்கு மணலை கடத்தி விற்கின்றனர். கிரைனைட் துறையிலும் ஆளும் கட்சியினர் பல கோடி ரூபாய் வரை ஊழல் செய்து வருகின்றனர்.

3 வருடங்களில் மாநிலத்தில் ஒரு தொழில் நிறுவனம் கூட முதலீடு செய்ய முன் வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் முதலீடு செய்யும் நிறுவனங்களிடம் 25 சதவிகிதம் கேட்கின்றனர். இதனால், முதலீடு செய்ய எந்த நிறுவனமும் வருவதில்லை.ராயலசீமா என்றால் வெயிலுக்கு பெயர் பெற்றது. அவ்வாறு இருக்கும் ராயலசீமாவில் ஏழை எளிய மக்களும் ஒன்றுக்கு 3 மின்விசிறிகள் வைத்து உள்ளார்கள். அவர்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தால் உடனே ரேஷன் கார்டு ரத்து செய்கின்றனர். ஏராளமானோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்லை. அவரது கட்சியினருக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு சித்தூர் அருகே  அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. அதற்குள் தேர்தல் வந்து விட்டது.  ஆளும் கட்சியினர் வெற்றி பெற்று விட்டனர். ஆனால், சந்திரபாபு நாயுடு  ஆட்சியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை ஏழை, எளிய மக்களுக்கு இதுவரை  வழங்கவில்லை.

* அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை.

* ஜெகன்மோகன் ஆட்சியில் அராஜகங்கள், கொலை மிரட்டல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது.

* மாநிலம் முழுவதும் 175 கோயில்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

* எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, அவர்களை பலாத்காரம் செய்வது உள்ளிட்ட செயல்கள் அதிகரித்து வருகிறது.

* கட்சி உறுப்பினர்கள் கிராமம் கிராமமாக ஒவ்வொரு வீடாகச்சென்று ஆளும் கட்சி செய்யும் அராஜகங்களை விளக்கி கூற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

இதில், எம்எல்சி துரைபாபு, முன்னாள் எம்எல்சி நிவாஸ், மாவட்ட துணை தலைவர் காஜூர் பாலாஜி, பொதுச்செயலாளர் கோதண்ட யாதவ், முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா,  இளைஞரணி தலைவர் காஜூர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏசி இருந்தால் ரேஷன் கார்டு ரத்து

சிமெண்ட் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், மின்சார வசதி, குடிநீர் வசதி  உள்ளிட்ட ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை. கார் வைத்திருந்தால் ரேஷன்  கார்டு ரத்து, ₹750க்கு மின்கட்டணம் வந்தால் ரேஷன் கார்டு ரத்து, வீட்டில்  ஏசி இருந்தால் ரேஷன் கார்டு ரத்து உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

Related Stories: