இந்தியாவின் எதிர்காலம் இந்திய மக்களால் தீர்மானிக்கப்பட உள்ளது: பல்வேறு சிக்கல்களை களைய இந்திய அரசுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளிப்போம்; அமெரிக்க தூதர் எரிக் சிறப்பு பேட்டி

எரிக் மைக்கேல் கர்செட்டி (53). அமெரிக்காவின் கலிபோர்னியா அரசில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். கூடவே அமெரிக்க கடற்படையில் ‘லெப்டினன்ட்’ ஆக பணியாற்றி இருக்கிறார். அரசியல் களத்தில் இறங்கியவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கவுன்சில் உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார். 2013 முதல் 2022வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 42வது மேயராக பணியாற்றி இருக்கிறார்.

எரிக் தொடர்ந்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக 2023 மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியத் தூதராக எரிக் பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் அவர், தினகரன் நாளேட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டி: இந்தியத் தூதராக ஓராண்டை நிறைவு செய்துள்ளீர்கள்…வாழ்த்துகள்…எப்படி இருந்தது முதலாண்டு? பதில்: நன்றி. இரு நாடுகளுக்கிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆண்டு. இந்தியா இனி என் வாழ்நாள் முழுவதும் என் இதயத்தை கவர்ந்த நாடாகி விட்டது.

கன்னியாகுமரியில் பார்த்த சூரிய உதயம் இந்தியாவின் நம்பமுடியாத பன்முகத்தன்மையின் அழகையும், வேற்றுமையில் ஒற்றுமையின் உண்மையையும் பிரதிபலித்தது. அதை இந்தியாவின் சிறப்பம்சமாக பார்க்கிறேன். அமெரிக்கா, இந்தியா இடையேயான கூட்டாண்மை முன்பை விட இப்போது ஆழமாகவும், விரிவானதாகவும் உள்ளது. கடலின் ஆழத்திலிருந்து, வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் வரை விரிந்திருக்கும் உலகை வடிவமைக்கும் முயற்சிகளில் நாம் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். இந்திய பிரதமர் வெள்ளை மாளிகைக்கு சென்ற அரசு முறை பயணம். டெல்லியில் நடந்த ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் எங்கள் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வுகள். அதன் தொடர்ச்சியாக, புத்தம் புதிய முயற்சியாக ஜெட் இன்ஜின்கள் உற்பத்தியில் கை கோர்த்திருப்பது, சுமார் 190 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வணிகத்தை இரு நாடுகளும் கையாளுவது என பல உதாரணங்களை சொல்லலாம்.

அதுமட்டுமின்றி இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். அதற்காக வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும். அமெரிக்க தூதராக என்ன செய்தோம் என்பது மகிழ்ச்சி அளித்தாலும், ஒன்றாக முன்னேறுவதின் மூலம் எதை சாதிக்க முடியும் என்பதில்தான் கூடுதல் உற்சாகம்.

தமிழ்நாட்டிலிருந்து கல்வி, சுற்றுலா, வணிகம் போன்ற காரணங்களுக்காக அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதா? ஆம் எனில், புள்ளி விவரங்கள் கிடைக்குமா? பதில்: எங்களிடம் இந்திய மாநில வாரியாக புள்ளி விவரங்கள் இல்லை. ஆனால் நீங்கள் கேட்ட எண்ணிக்கை உயர்வது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு பயணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் தற்போது 2,60,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயர்கல்வியை கற்கின்றனர். இது முன்பை விட அதிகம் மட்டுமல்ல, மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் படிப்பவர்களை விட அதிகம். இந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க விசா பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு மட்டும் நாங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க விசாக்களை வழங்கினோம். கொரோனா தொற்றுநோய் காலம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கிறது.

இருப்பினும் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை குறையப் போவதில்லை. மாறாக அமெரிக்க விசா பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். அமெரிக்க விசாவுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக்கு விண்ணப்பதாரர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த காத்திருப்பு நாட்களை குறைக்கும் திட்டம் உள்ளதா, அவசர காலங்களில் உடனடியாக விசாவிற்கான நடைமுறைகள் என்ன?

பதில்: உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நிலைமைகள் மாறிவிட்டன. B1, B2 வணிகம், சுற்றுலா விசாக்களுக்காக முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களை தவிர, மற்ற அனைத்து விசா விண்ணப்பங்களுக்கும் இந்தியாவில் காத்திருப்பு நேரம், பூஜ்யமாக யு.எஸ் மிஷன் குறைத்துள்ளது. வணிகம், சுற்றுலாவுக்காக முதல் முறை விண்ணப்பிப்பவர்களுக்கும் காத்திருப்பு நேரத்தை 75 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளோம்.

இந்திய மாணவர்கள் சரியான நேரத்தில் சென்று தங்கள் படிப்புகளை தொடங்கவும், பணி நிமித்தமாக செல்வபர்கள் சரியான நேரத்தில் இணைந்து இருநாடுகளில் செழுமைக்கு பங்களிப்பை செய்யவும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அர்ப்பணிப்பு உணர்வு உள்ள எங்கள் ஊழியர்கள் மூலம் விடுமுறை நாட்களிலும் இப்பணிகளை செய்து வருகிறோம். நம் நாடுகளுக்கு இடையே மக்கள் பயணத்துக்காகவும், பொருட்கள் பரிமாற்றத்துக்காகவும் இந்தியாவில் அதிக யுஎஸ் விசா தேவை இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

எனவே காத்திருப்பு நேரத்தை முடிந்தவரை குறைக்க, எங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறோம். சில சமயங்களில் விண்ணப்பதாரர்களுக்கு எதிர்பாராத பயணத் தேவைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மருத்துவ பராமரிப்புக்காகவோ, எதிர்பாராத மரணம் காரணமாகவோ அல்லது அவசர வணிகத்துக்காகவோ, உடனடியாக விசா கிடைப்பதற்கு https://www.ustraveldocs.com/in/en/expedited-appointment என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் நடந்து வரும் தேர்தல் குறித்து அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

பதில்: கடந்த சில வாரங்களாக நடந்து வரும் தேர்தலில், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். அவர்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை நாங்களும் கொண்டாடுகிறாம். நிச்சயமாக, இந்த தேர்தலின் முடிவும், இந்தியாவின் எதிர்காலமும் இந்திய மக்களால் தீர்மானிக்கப்பட உள்ளது. வரவிருக்கும் ஆண்டில், பலவிதமான சிக்கல்களை களைய இந்திய அரசுடன் எங்கள் கூட்டாண்மையை உறுதியாக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

உலக அமைதிக்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் எந்த வகையில் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் மண்டலத்தை மேம்படுத்துவதில் இந்தியாவும், அமெரிக்காவும் முக்கிய பங்காளிகளாக உள்ளன. கூடவே பசிபிக் மண்டலம் மீதான பார்வையை நமது நாடுகள் ஒரே மாதிரியாக வைத்துள்ளன. அதாவது வளமான, பாதுகாப்பான, அமைதியான சூழல் நிலவ நமது நாடுகள் இணைந்து செயல்படும்.

மனிதாபிமான உதவி முதல் தடுப்பூசி தயாரிப்பு வரை சூழ்நிலைக்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதால், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பயனுள்ள அடிப்படை விதிகளை அமைப்பது வரை பல்வேறு பிரச்னைகளை களைய அமெரிக்காவும், இந்தியாவும் எங்கள் நாற்கர கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்படுகின்றோம். இவ்வாறு எரிக், தனது சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

* அமெரிக்காவில் தற்போது 2,60,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயர்கல்வியை கற்கின்றனர்.

* இது மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் படிப்பவர்களை விட அதிகம்.

* கடந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க விசாக்களை வழங்கினோம்.

* B1, B2 வணிகம், சுற்றுலா விசாக்களுக்காக முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களை தவிர, மற்ற அனைத்து விசா விண்ணப்பங்களுக்கும் இந்தியாவில் காத்திருப்பு நேரம், பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் எதிர்காலம் இந்திய மக்களால் தீர்மானிக்கப்பட உள்ளது: பல்வேறு சிக்கல்களை களைய இந்திய அரசுக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளிப்போம்; அமெரிக்க தூதர் எரிக் சிறப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: