இலங்கையுடன் பகல்/இரவு டெஸ்ட்: கங்குலி அறிவிப்பு

புதுடெல்லி: ‘இலங்கை அணியுடன்   இளஞ்சிவப்பு பந்திலான  பகல்/இரவு டெஸ்ட்  ஆட்டமாக பெங்களூரில் நடைபெறும்’ என்று  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி  பிப்.5ம் தேதி முதல் பிப்.20ம் தேதி வரை தலா 2 ஆட்டங்களை கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளது. அதனையடுத்து நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளது. இடைப்பட்ட  காலக் கட்டத்தில்  இலங்கை அணி,  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.

அதற்கு ஏற்ப பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று, ‘இந்தியா-இலங்கை இடையே 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரும், 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரும் நடைபெறும். டெஸ்ட் தொடரில் ஒரு ஆட்டம் இளஞ்சிவப்பு பந்து மூலம் பகல்/இரவு டெஸ்ட் ஆட்டமாக பெங்களூரில் நடக்கும். இந்த தொடர் முடிந்ததும் கொரோனா பரவல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடக்கும்.   ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகளின் போது  ‘மகளிர் டி20 சேலஞ்ச்’ போட்டி இந்த ஆண்டு மே மாதம் நடத்தப்படும்.

ஆயிரமாவது ஆட்டம்: நான் கேப்டனாக இருந்தபோது இந்தியா 2002ம் ஆண்டு ஜூலை மாதம்  500வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக  விளையாடியது. இப்போது பிப்.6ம்தேதி  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் இந்தியாவுக்கு ஆயிரமாவது ஒருநாள் ஆட்டமாகும். ஆனால் ரசிகர்கள் இல்லாமல் விளையாடப் போவது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.

Related Stories: