திருப்பூர், அவினாசி அருகே 4 நாளாக அட்டகாசம் 8 பேரை கடித்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது: கடம்பாறை வனப்பகுதியில் விட திட்டம்

திருப்பூர்: திருப்பூரில் 8 பேரை கடித்து குதறிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூர் அருகே அவினாசியை அடுத்த சேவூர் பாப்பாங்குளம் பகுதியில் விவசாய தோட்டத்தில் சோளதட்டை அறுத்துக்கொண்டிருந்த வரதராஜன், மாறன் ஆகியோரை கடந்த 24ந் தேதி அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது. அந்த சிறுத்தையை தேட சென்ற வெங்கடாச்சலம், மோகன்குமார் ஆகியோரையும் சிறுத்தை தாக்கியது. இது குறித்து மாவட்ட வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வலை விரித்தும், சோளக்காட்டில் வாகனங்களில் சென்றும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக வனசரக வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் என்பவரை சிறுத்தை தாக்கி கடித்து குதறியது.

இந்த நிலையில் கடந்த 25ந் தேதி பெருமாநல்லூர் அருகே உள்ள சாலையை கடந்து பொங்குபாளையம் பகுதிக்கு சிறுத்தை சென்றதை பால் வியாபாரி விஜயகுமார் பார்த்துள்ளார். தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சிறுத்தையின் எச்சம் மற்றும் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொங்குபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் முழுவதும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 8.15 மணிக்கு அம்மாபாளையம் பகுதியில் வேஸ்ட் குடோன் ஒன்றில் சிறுத்தை பதுங்கியிருந்தது.

இதனை அறியாமல் அந்த பகுதிக்கு சென்ற ராஜேந்திரன் (50) என்ற தொழிலாளியை சிறுத்தை கடித்து குதறியது. பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் மற்றும் கோவை மண்டல தலைமை வன அலுவலர் ராமசுப்ரமணியம், மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் அம்மாபாளையம் பகுதிக்கு விரைந்தனர்.

வேஸ்ட் குடோனில் பதுங்கிருந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றிவளைத்தனர். அப்போது வன ஊழியர்கள் சிவக்குமார், தனபால், பிரவீன் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுத்தை அம்மாபாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாய் வீதியில் புதரில் பதுங்கியது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின்பேரில் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் புதர் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். சிறுத்தை தப்பிவிடாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் வலை கட்டப்பட்டது. டிரோன் மூலமாகவும் சோதனை செய்தனர்.

தீவிர தேடுதலுக்கு பிறகு புதரில் சிறுத்தை இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது முட்புதர் அருகே சுவரின் மேல்பகுதியில் நின்றிருந்த உடுமலை வன ஊழியர் அனந்தகுமாரை (35) சிறுத்தை தாக்க முயற்சித்தது. இதனால் பதற்றம் நிலவியது. பின்னர் வனத்துறை மருத்துவர் விஜயராகவன் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து சிறுத்தை கீழே படுத்தது. தொடர்ந்து 2வது மயக்க ஊசியும் செலுத்தப்பட்டது. இதில் சிறுத்தை மயக்கமடைந்தது.

உடனே அந்த பகுதிக்கு வனத்துறை வாகனம் கொண்டு வரப்பட்டு, கூண்டில் சிறுத்தை அடைக்கப்பட்டது. தொடர்ந்து அமராவதிக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறுத்தையின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்தபின் அடர்ந்த காட்டில் விடப்படும் என தெரிகிறது. இது குறித்து ஆனைமலை  புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியம் கூறுகையில், ‘‘பிடிபட்ட ஆண் சிறுத்தைக்கு 3 முதல் 4 வயது வரை இருக்கும். சிறுத்தையை வால்பாறை அடுத்த காடம்பாறை வனப்பகுதியில்  விட உள்ளோம்’’ என்றார்.

* கை தட்டி மகிழ்ந்த பொதுமக்கள்

திருப்பூர் அம்மாபாளையம் கஸ்தூரிபாய் வீதியில் சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அங்கு பொதுமக்கள் பலர் திரண்டனர். அவர்களை பாதுகாப்பான பகுதியில் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர். இதனால் வீட்டு மொட்டை மாடிகளில் நின்றபடி சிறுத்தையை பிடிக்கும் பணியை பார்வையிட்டனர். பலரும் தங்களது செல்போன்களில் அந்த காட்சிகளை பதிவு செய்தனர். நேற்று மதியம் சிறுத்தையை பிடித்து வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றியபோது பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வனத்துறையினரை பாராட்டி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.

Related Stories: