ஐபிஎல் பொது ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் தயார்; ரூ.2 கோடி அடிப்படை விலை பட்டியலில் அஸ்வின், வார்னர் உள்பட 46 பேர்.! பெங்களூருவில் பிப்.12, 13ம் தேதி நடைபெறும்

மும்பை: 15வது ஐபிஎல் டி.20 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இதனால் மொத்த அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, மும்பை இண்டியன்ஸ், ரோகித் சர்மா (ரூ.16 கோடி), பும்ரா (ரூ.12 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.8 கோடி), பொல்லார்ட் (ரூ.6 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. மொத்த ஏலத்தொகை ரூ.90 கோடியில் ரூ.48 கோடியை மீதம் வைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விராட் கோஹ்லி (ரூ.15 கோடி), மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி) ஆகியோரை தக்க வைத்து, பொது ஏலத்திற்கு ரூ.57 கோடியை மீதம் வைத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ், மயங்க் அகர்வால் (ரூ.14 கோடி), அர்ஷ்தீப் சிங் (ரூ.4 கோடி) ஆகியோரை தக்கவைத்து ரூ.72 கோடியை பொது ஏலத்திற்கு வைத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், கேன் வில்லியம்சன் (ரூ.14 கோடி), அப்துல் சமத் (ரூ.4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி) ஆகியோரை தக்க வைத்து, ரூ.68 கோடியை வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), டோனி (ரூ.12 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி) ஆகிய வீரர்களை வைத்துள்ளது. அந்த அணியிடம் ரூ.42 கோடி மீதமுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், ரிஷப் பன்ட் (ரூ.16 கோடி), அக்சர் படேல் (ரூ.9 கோடி), பிருத்வி ஷா (ரூ.7.5 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (ரூ.6.5 கோடி) ஆகியோரை தக்க வைத்து, ரூ.47.5 கோடியை ஏலத்திற்கு இருப்பு வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜோஸ் பட்லர் (ரூ.10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.4 கோடி) ஆகியோரை அணியில் நீடிக்க வைத்துக் கொண்டுள்ளது.

மீதமுள்ள ரூ.62 கோடியில் பொதுஏலத்தில் வீரர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. கேகேஆர் அணி, ஆண்ட்ரே ரசல் (ரூ.12 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (ரூ.8 கோடி), சுனில் நரைன் (ரூ.6 கோடி) ஆகியோரை அணியில் நீடிக்க செய்துள்ளது. மீதமுள்ள ரூ.48 கோடியுடன் பொது ஏலத்திற்கு தயாராக உள்ளது. புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்)  ரூ.15 கோடி, ரஷித் கான் ரூ.15 கோடி, ஷுப்மான்கில் ரூ.8 கோடிக்கும், லக்னோ அணி கே.எல்.ராகுல் (கேப்டன்) ரூ.17 கோடி, மார்கஸ் ஸ்டோனிஸ் ரூ.9.2 கோடி, ரவி பிஷ்னோய் ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்திற்கு முன் 10 அணிகளும் 33 வீரர்களை ரூ.338 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 896 பேர் இந்திய வீரர்கள். 318 பேர் வெளிநாட்டு வீரர்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 59, தென்ஆப்ரிக்கா 48, வெஸ்ட்இண்டீஸ் 41, இங்கிலாந்து 30, நியூசிலாந்தைச் சேர்ந்த 29 பேர் பதிவு செய்துள்ளனர்.

ரூ.2 கோடி அடிப்படை விலையில், அஸ்வின், தவான், ஸ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன், சுரேஷ் ரெய்னா, பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ,குயின்டன் டி காக், டு பிளெசிஸ், மார்க் வுட், ககிசோ ரபாடா , டுவைன் பிராவோ என 46 பேர் இடம் பெற்றுள்ளனர். ரூ.1.5 கோடி அடிப்படை விலையில், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஆரோன் ஃபின்ச், கிறிஸ் லின், நாதன் லியோன், கேன் ரிச்சர்ட்சன், ஜானி பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் மோர்கன், டேவிட் மாலன், டிம் சவுத்தி, ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் உள்ளனர். ரூ.1 கோடி பட்டியலில், பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், பிரசித் கிருஷ்ணா, டி நடராஜன், மணீஷ் பாண்டே, ரகானே, நிதிஷ் ராணா, சாஹா, குல்தீப் யாதவ், ஜெயந்த் யாதவ், முகமது நபி, ஜேம்ஸ் பால்க்னர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான், மத்திய பிரதேச மிதவேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் பெரிய தொகைக்கு ஏலம் போகலாம். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாந்த் ரூ.50 லட்சம் அடிப்படை விலை பட்டியலில் உள்ளார்.

Related Stories: