சுகாதார உள்கட்டமைப்பில் மாணவர் சேர்க்கை முக்கிய பங்கு வகிப்பதால் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும்  செம்மொழி  தமிழாய்வு  மத்திய நிறுவனத்திற்கான புதிய  கட்டிடம்  ஆகியவை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துகொள்ளக்கூடிய முதல் அரசு விழா என்பதால் பிரதமருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் கனவாகும். 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவின் தேர்தல் அறிக்கையை கலைஞர்  வெளியிட்டார். அதில் கல்வி என்ற துணைத் தலைப்பில் ஒரு குறிக்கோளை அறிவித்தார். ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம்’ என்று அறிவிக்கப்பட்டது.

2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க திட்டமிடுதல்களை செய்திருக்கிறோம். ‘அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள்’ என்ற கலைஞரின் கனவுதான் இன்றைய நாள் நிறைவேறி இருக்கிறது. நமது நாட்டிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும், மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு மருத்துவ துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும், குறிப்பாக, பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி கூறக்கூடிய அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்கு தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்கு பயன் தரும் மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு புதுமையான திட்டங்களை தீட்டி, சிறப்புற செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இந்த சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசு துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும். எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதே. தமிழ்நாட்டின் மருத்துவ துறையின் வெற்றியும் இந்த கொள்கையின் விளைவே.

இந்த அடிப்படை கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும்.

தமிழக அரசின் சுகாதார உள்கட்டமைப்பில் மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பாதுகாக்கவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கை ஒன்றிய அரசு சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் இன்று இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். தமிழர்களின் நூற்றாண்டு கனவான செம்மொழி தகுதியை 2004ம் ஆண்டு பெற்றுத்தந்தவர் கலைஞர். அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு ரூ.24 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைத்து தந்த ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை பிரதமருக்கும், அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு  மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: