விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு-கிராம மக்கள் நிம்மதி

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை மிதித்து கொன்ற ஒற்றை யானையை, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா கண்டகானப்பள்ளி அருகே தின்னூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி எல்லப்பா(35). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், ஊருக்கு அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை துரத்திச் சென்று தூக்கிப் போட்டு காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர், எல்லப்பா சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஒற்றை யானை தாவரக்கரை, நொகனூர் உள்ளிட்ட கிராமங்களில் வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்தது. மேலும், ஆக்ரோஷமாக சுற்றி வந்தது. இதனிடையே, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, தாரை தப்பட்டைகளை அடித்து, ஒற்றை யானையை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: