மழை, வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் குழு அறிக்கை தாக்கல்..!!

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் தலைமையிலான 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அளித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளருமான திருப்புகழ்  தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை, வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தியது.

வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், அதற்கு நிரந்தர தீர்வு காண்பது, மழைநீர் வடிகால்வாய்களை மேம்படுத்துவது, சுற்றுச்சூழல் நகர திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்புகழ்  தலைமையிலான வல்லுநர் குழு சந்தித்து தனது இடைக்கால அறிக்கையை அளித்துள்ளது. மழை வெள்ளத்தால் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள், அடுத்த முறை நடக்காமல் இருப்பதற்கான திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய உரிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: