கடை முன்பு பைக் நிறுத்துவதில் தகராறு பைக் மெக்கானிக் படுகொலை: இறைச்சி கடை ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியில் கடை முன்பு பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், மெக்கானிக்கை கத்தியால் குத்தி கொலை செய்த இறைச்சிக்கடை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி முத்து ருனிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் பாய்ஸ் (எ) பாக்கர் (23). திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் வாசலில் பைக் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்க்கும் ரஹீம் (21), நூருல் (22), ஹாஜா (21) ஆகியோர், தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பாக்கர் கடையை தாண்டி தான் செல்ல முடியும்.

பாக்கர் தனது கடைக்கு பழுது நீக்க வரும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த வழியாக பைக்கில் செல்லும் இறைச்சி கடை ஊழியர் ரஹீம்க்கு தொந்தரவாக இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை பாக்கரிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லை, என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை ரஹீம் தனது இைறச்சி கடைக்கு வேலைக்கு செல்லும்போது, பாக்கர் கடை முன்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பைக்குகள் நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆத்திரம் தீராத பாக்கர், கடையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு ரஹீம் வேலை செய்யும் இறைச்சி கடைக்கு சென்று, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். இறைச்சி கடையில் உடன் பணியாற்றும் நண்பர்களான நூருல் மற்றும் ஹாஜா அருகியோர், மெக்கானிக் பாக்கரை தடுத்துள்ளனர். அப்போது அவர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ரஹீம், இறைச்சி கடையில் ஆட்டின் தோல் உரிக்க பயன்படுத்தும் கத்தியை கொண்டு வந்து, பாக்கரை சரமாரியாக குத்தினார். இதில் அவர் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார், உயிருக்கு போராடிய பாக்கரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரஹீம் அவரது நண்பர் நூருல் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹாஜாவை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: