பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்; தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் முற்றுகை: பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே, பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, செங்கட்டான்பட்டி கிராமத்தில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன. மாணவ, மாணவியர் 180 பேர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியராக சுகுமாரி உள்ளார். இவர், 7ம் வகுப்பு மாணவிகளை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.

மாணவிகள் பினாயில், பிளிச்சிங் பவுடர் மூலம் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். இதனால், அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்களிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பள்ளி செல்ல விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், ஊர் மக்களும் நேற்று பள்ளி முன் திரண்டு, கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

அவரிடம் மாணவிகள், ‘‘தலைமையாசிரியர் சுகுமாரி கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார். தினசரி கழிவறையை சுத்தம் செய்தோம். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆசிரியர் ஸ்டீபன் சாப்பிட்ட டிபன் பாக்ஸை கழுவ சொல்கிறார்’’ என புகார் தெரிவித்தனர். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்களும் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டபோது, ‘‘புகாருக்கு உள்ளான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: