பொது விநியோக திட்டத்தை வருமானம் அடிப்படையில் குறைக்க முயற்சிப்பதா: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது விநியோக திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரி துறையினை உணவு துறை வாயிலாக கேட்டுள்ளது. அனைவருக்குமான பொது  விநியோக திட்டம் என்பதை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நியாய விலை  கடைகள் மூலம் பொருட்களை வழங்கி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகளை குறைக்கும் பொருட்டு, வருமான வரி  விவரங்களை தமிழ்நாடு அரசின் உணவு துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது விநியோக திட்டம்  என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில்  குறைத்து இலக்கு சார்ந்த பொது விநியோக திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து  நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: