சென்னை: அமாவாசை என்பதால் நேற்று அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் மும்முரமாக நடந்தது. ஏராளமானோர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை அளித்தனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ மட்டுமே இடம்பெற்றுள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அதிமுக அணியில் பாஜ இடம்பெற்றுள்ளதை அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. அவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். சிலர் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள பாஜ அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. இதனால் எடப்பாடி கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி கடந்த 15ம் தேதி முதல் அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். முதல் நாளில் மட்டும் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 349 பேர், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் விருப்ப மனு அளித்து இருந்தனர். மேலும் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி 888 பேரும் விருப்ப மனு அளித்திருந்தனர்.
தொடர்ந்து விருப்ப மனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று அமாவாசை என்பதால் விருப்ப மனு கொடுக்க ஏராளமானோர் அதிமுக அலுவலகத்தில் குவிய தொடங்கினர். காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். பலர் அங்கேயே விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். இதனால் அதிமுக அலுவலகம் தொண்டர்களால் களைகட்டி இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்த விருப்ப மனுவில் அதிமுகவில் எந்த ஆண்டிலிருந்து உறுப்பினராக உள்ளீர்கள், கட்சியில் தற்போது வகிக்கும் பதவி, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரளமாக பேச தெரிந்த பிற மொழிகள், வெற்றி வாய்ப்பு விவரம், கட்சி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சி போராட்டங்களில் சிறை சென்ற விவரம், நீதிமன்ற வழக்குகள் இருந்தால் அதன் விவரம் என்பன உள்ளிட்ட 25 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. விருப்ப மனு விநியோகம் வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது. விருப்ப மனு விநியோகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
