சென்னை: நகராட்சி நிர்வாகம் சார்பில் பல நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைத்து வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியில் வரலாற்றில் இடம்பெற்ற மன்னர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தகடூர் அதியமான் பெயரை கொண்டு தர்மபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு ‘‘மழவர் பெருமகன் வள்ளல் அதியமான் புதிய பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டவேண்டும். இதுபோல திண்டிவனத்தை சங்க காலத்தில் அரசாட்சி செய்த ‘‘ஓய்மான் நல்லியக்கோடன்” பெயரை திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்டவேண்டும். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு நாகப்ப படையாட்சியார் பெயர் சூட்ட வேண்டும். இதுதவிர, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதியில் அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு இதுபோல் அந்த பகுதி மன்னர்கள் பெயர் சூட்டப்பட வேண்டும்.
