சேலத்தில் 30ம் தேதி விஜய் பிரசாரம்? இடத்தை தேர்வு செய்த நிர்வாகிகள்

சேலம்: தவெக தலைவர் நடிகர் விஜய் கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 2 மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் ஈரோட்டில் பிரசார பொதுக்கூட்டத்தை விஜய் நடத்தினார். அடுத்ததாக சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சேலத்தில் கூட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், குறுகிய நாட்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், வேறு ஒரு நாளில் வைக்குமாறு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பிரசார கூட்டம் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சேலத்தில் தற்போது பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலில் நேற்று முன்தினம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் ஆகியோர் பிரசாரத்திற்கான இடத்தை பார்வையிட்டுள்ளனர். மேலும் இடத்தை முடிவு செய்துவிட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி இம்மாதம் 30ம் தேதி, விஜய் பிரசார கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் கூறுகையில், ‘‘தவெக தலைவர் விஜய் வரும் 30ம்தேதி, சேலத்தில் பிரசாரம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.
இதில் ஏதாவது மாற்றம் வருமா? என்பது இன்னும் ஓரிருநாட்களில் தெரிந்து விடும்,’’ என்றார். அதேநேரத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இம்மாதம் விஜய் மலேசியா செல்கிறார். பிரசார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி பெறுவதிலும் சிலவிதிமுறைகள் உள்ளது. இதனால் டிசம்பர் இறுதியில் இல்லாவிட்டாலும் ஜனவரியில் சேலத்தில் விஜய் பிரசாரம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

* அரைகுறை ஆடையில் பெண் நிர்வாகி வீட்டில் தவெக மாவட்ட தலைவர்: உறவினர்கள் தர்மஅடி மன்னிப்பு கேட்டு கெஞ்சல் வீடியோ வைரல்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக தலைவராக இருப்பவர் செந்தில்நாதன் (47). இவர், நேற்று முன்தினம் ஈரோட்டில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நள்ளிரவில் காரில் திருச்செங்கோடு திரும்பியுள்ளார். அப்போது, கூட்டப்பள்ளியில் உள்ள மகளிரணி மாவட்ட பெண் நிர்வாகி வீட்டில் தங்கியுள்ளார். நள்ளிரவில் கார் வந்ததால், சிலர் சந்தேகப்பட்டு அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வீட்டை சுற்றிவளைத்து கதவை தட்டினர். சம்மந்தப்பட்ட பெண் கதவை திறந்துள்ளார். உடனே, உறவினர்கள் உள்ளே புகுந்து அரைகுறை ஆடையில் தப்பிக்க முயன்ற செந்தில்நாதனை மடக்கி பிடித்தனர்.

வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில், உனக்கு இங்கே என்ன வேலை எனக்கேட்டு, அவரை சரமாரியாக தாக்கினர். இதுபற்றி தகவலறிந்து நேற்று அதிகாலை அங்கு வந்த தவெக நிர்வாகிகளுக்கும், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நீண்டநேரத்திற்கு பின்பு செந்தில்நாதனை நிர்வாகிகள் மீட்டு சென்றனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்ற செந்தில்நாதன் கெஞ்சி மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து, பெண் நிர்வாகியின் குடும்பத்தினர் புகார் கொடுக்காமல் சென்றதால் மாவட்ட தலைவரை போலீசார் அனுப்பி வைத்தனர். மாவட்ட தலைவரை பெண் நிர்வாகியின் உறவினர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: