11 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் ஏரி நிரம்பியது

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தியூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன.கடந்த மாதம் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. அதனைத் தொடர்ந்து எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பிய நிலையில் நான்காவதாக அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி உள்ளது. இதில் முழு கொள்ளளவு 41.8 மில்லியன் கன அடி தண்ணீர் 192 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. நேற்று காலை முதல் உபரி நீரானது 200 கனஅடி வெளியேற துவங்கியது. உபரிநீரானது அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் ஏரிக்கு செல்லத் தொடங்கியுள்ளது.

தற்போது ஏரியின் கிழக்கு புறக்கழங்கு மேற்கு கழங்கில் உபரிநீர் வெளியேறுவதால்  அந்தியூர் நகரின் முக்கிய வீதிகளான பெரியார் நகர், கண்ணப்பன் கிணற்று வீதி, நேருநகர் உள்ளிட்ட பகுதிக்குள் நீர்வரும் என்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் ஏற் கனவே வாய்க்கால்கள் சுத்தம் செய்து உபரி நீர் தங்கு தடையின்றி செல்வதற்கான ஏற்பாடுகளை திமுக எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் மற்றும் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி முடுக்கி விட்டுள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரு நகர் மற்றும் கண்ணப்பன் கிணற்று வீதியில் உள்ள 35 குடும்பங்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

கெட்டிசமுத்திரம் மற்றும் அந்தியூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரால் ராசாங்குளம், சந்திபாளையம் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. 11 ஆண்டுக்குப் பிறகு அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதை உள்ளூர் மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Related Stories: