யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு!

கோவை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு அனுமதி வழங்கியுள்ளார். சைபர் கிரைம் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர் (எ) சவுக்கு சங்கர் (48). இவர் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனல் மற்றும் பிற யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார்.

இதன் அடிப்படையில் கடந்த 4ம் தேதி சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர். கைது செய்யப்படும் போது, 400 கிராமுக்கு மேல் அவரது காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 7ம் தேதி கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அவதூறு வழக்கில் திருச்சி போலீசார் கடந்த 8ம் தேதி சங்கரை கைது செய்தனர். இத்துடன் சென்னை பெருநகர காவல்துறையில் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் ஒருவர் அளித்த புகார் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகார் ஆகியவற்றின் மீது யூடியூபர் சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஆகியோர் மீது சைபர் கிரைம் போலீசார் கடந்த 7ம் தேதி தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்களிடையே போலி ஆவணம் மூலம் பீதியை ஏற்படுத்தியது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சங்கர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கஞ்சா பதுக்கிய வழக்கில் தேனி போலீசார் சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள சங்கரின் யூடியூப் சேனல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை தேனி போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் மீது சைபர் கிரைம் போலீசார் அளித்த பரிந்துரைப்படி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், யூடியூபர் சங்கர் (48) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

கடந்த வாரம் சவுக்கு சங்கரை 5 வழக்குகள் சம்பந்தமாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில், கோவை சைபர் கிரைம் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடரப்பட்டதால் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சவுக்கு சங்கர் தரப்பில் இதற்கு ஏதேனும் எதிர்ப்பு உள்ளதா என கேட்டார். ஆனால் சவுக்கு சங்கர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தற்போது நீதிமன்றம் தரப்பில் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமத்தியளிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 5 மணிக்கு காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: