ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 2வது மூத்த நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

அலகாபாத் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக உள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி, சிவில், கிரிமினல், தொழிலாளர் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். ராஜஸ்தான் அரசின் பல்வேறு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார். கடந்த 2007ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2019ல் அலகாபாத் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணிகளை கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை கவனித்து வந்தார். முனீஸ்வர் நாத் பண்டாரி  அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற

 உள்ளார்.

Related Stories: