தோகைமலை பகுதியில் பலத்த மழை 16 ஆண்டுக்கு பிறகு நிறைந்த வடசேரி பெரிய ஏரி-மாவட்ட கண்காணிப்பாளர், எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு

தோகைமலை : கனமழையால் 16 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த வடசேரி பெரிய ஏரி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளப்பாதிப்பு மீட்பு குழு மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கடந்த 14 நாட்களாக பலத்த மழை பொழிந்து வருவதால் ஆற்றுவாரிகளில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் நிறைந்து பாசன ஏரிகளுக்கு மழைநீர் வருவதால் ஏரிகள் நிறைந்து வருகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு 344.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடசேரி பெரிய ஏரி நிறைந்தது. மேலும் மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் சூழ்ந்தது.

இதனை அடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக கைத்தறி துறை ஆணையர் மற்றும் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ், கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். இதில் தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் மேலவெளியூர் பேருந்து நிறுத்தம் பகுதி, வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி அருகே உள்ள பகுதியில் வெள்ள நீரில் நெற்பயிர்கள் மூழ்கிய பகுதிகளை ஆய்வு செய்து மழைநீர் வடிய அனைத்து ஏற்படுகளும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல் வடசேரி பெரிய ஏரியின் வடிகால் பகுதியை ஆய்வு செய்து ஏரியின் நீர் வரத்து, கரையின் தன்மை, பாசனத்திற்காக திறக்கப்படும் மதகின் தன்மைகள், ஏரியின் வடிகால் மூலம் செல்லும் தண்ணீரால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து கேட்டறிந்தனர்.பின்னர் ஏரியின் அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் பாதுகாப்பு, வெள்ள நீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கும் முகாம் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அரசு பள்ளிக்கு பாதுகாப்பான சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திவ்யாவிற்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து நிறைந்து வழியும் புழுதேரி ஏரி, பாதிரிபட்டி ஏரியையும் பார்வையிட்டனர்.

அப்போது அனைத்து ஏரிகளுக்கும் வரும் வரத்துவாரிகள் மற்றும் நீர்வடிந்து செல்லும் வாரிகளை தூர்வார வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ராமர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.ஆய்வின் போது மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல், குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி, தோகைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: