எதையும் சந்திக்க தயார்: விமானப்படை தளபதி சவுதாரி பேச்சு

புதுடெல்லி:  உத்தரப் பிரதேசம், காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில், விமானப்படையின் 89வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி சவுதாரி, கடற்படை தளபதி கரம்பீர் சிங், ராணுவ தலைமை தளபதி நரவானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் விமானப்படை தளபதி சவுதாரி பேசியதாவது: நமது சவால்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. விமானப்படையின் திறனை சிறந்த முறையில் உறுதி செய்வதில் நமது வலிமையும், உறுதியும் இருக்கின்றது.

இன்று நமது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில்கொள்ளும்போது ஒரு முக்கியமான தருணத்தில் நான் பொறுப்பேற்றுள்ளேன் என்பதை தீவிரமாக உணர்கிறேன். அந்நிய படைகள் நமது பிராந்தியத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நாட்டுக்கு நாம் நிரூபிக்க வேண்டும். தெளிவான வழிகாட்டுதல், சிறந்த தலைமை மற்றும் சிறந்த வளங்களை என்னால் வழங்குவதற்கான அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.  கடந்த ஆண்டு ஜூனில் கிழக்கு லடாக்கில் பதற்றம் அதிகரித்தபோது விமானப்படை முன்னணி மற்றும் நவீன போர் விமானங்களை கிழக்கு லடாக் மற்றும் பிற முக்கிய விமான தளங்களில் நிறுத்தியது நினைவுக்கூரத்தக்கது.

கிழக்கு லடாக்கில் எந்தவித பாதுகாப்பு சவால்கள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு விமானப்படை தயார் நிலையில் இருக்கின்றது. ரபேல் போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களின் வருகையால் விமானப்படையின் தாக்குதல் திறன் பலமடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து விமானப்படையில் இடம்பெற்றுள்ள போர் விமானங்களின் பல்வேறு சாகசங்கள் இடம்பெற்றன.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர்  மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘விமானப்படை தினத்தில் விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். விமானப்படை தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு ஒத்ததாகும். நாட்டை பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களிலும் மனிதாபிமான உணர்வுடன் சிறப்பாக செயல்பட்டு, விமானப்படை வீரர்கள் தனித்துவமாக தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர்,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: