மோசெல் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி

மெட்ஸ்: மோசெல் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் நம்பர் 1 வீரர் ஆண்டி முர்ரே, பிரான்சின் உகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.பிரான்சின் மெட்ஸ் நகரில் மோசெல் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு நடந்த முதல் சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரான்சின் இளம் வீரர் உகோ ஹம்பர்ட்டுடன் மோதினார். இதில் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் பறி இழந்த முர்ரே, 2வது செட்டில் 3-3 என்ற சமநிலையில் இருந்தார்.

அதன் பின்னர் தனது முதிர்ச்சியான அனுபவ ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அவர், தொடர்ச்சியாக 7 கேம்களை கைப்பற்றினார். 6-3 என 2வது செட்டை கைப்பற்றிய முர்ரே, 3வது செட்டில் மிக நிதானமாக ஆடினார். ரிட்டர்ன் ஷாட்டுகளில் துல்லியமாக பந்தை பிளேஸ் செய்து, தொடர்ச்சியாக புள்ளிகளை அள்ளினார். 2 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இப்போட்டியில் இறுதியில் முர்ரே 4-6, 6-3, 6-2 என 3 செட்களில் ஹம்பர்ட்டை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தனது இந்த வெற்றி குறித்து முர்ரே கூறுகையில், ‘‘ஹம்பர்ட்டும் நன்றாகத்தான் ஆடினார்.

ஆனால் அவருக்கான வாய்ப்புகள் கிடைத்த போது, அவற்றை கோட்டை விட்டார். நான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்த போது, அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அவ்வளவுதான். முதல் செட்டை இழந்த பின்னரும், இப்போட்டியில் வென்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு 100 சதவீதம் இருந்தது’’ என்று தெரிவித்தார். கடந்த 2007ம் ஆண்டு இதே மோசெல் ஓபனில் பைனலில் ஸ்பெயின் வீரர் டாமி ரோப்ரெடோவிடம் முர்ரே கோப்பையை பறிகொடுத்தார். அதன் பின்னர் மீண்டும் இந்த ஆண்டுதான் இத்தொடரில் பங்கேற்றுள்ளார். இன்று இரவு நடைபெறவுள்ள அடுத்த சுற்றுப் போட்டியில் அவர் கனடாவின் வாசேக் பாஸ்பிசில்லுடன் மோதவுள்ளார்.

Related Stories:

>