நாமகிரிப்பேட்டை அருகே பரபரப்பு நித்தியானந்தா சீடர்களை விரட்டியடித்த கிராம மக்கள்: பெங்களூரு ஆசிரமத்தில் தங்கிய பெண்ணை மீட்டனர்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே காரில் வந்த நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய மக்கள், ஆசிரமத்தில் தங்கியிருந்த தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்ணை மீட்டனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(54). இவரது மனைவி அத்தாயி(46). இவர்களுக்கு பழனிசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நித்தியானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அத்தாயி, கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரு பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார்.

இதனிடையே, வங்கியில் வாங்கியுள்ள கடனுக்கு, அத்தாயி கையெழுத்து போடவேண்டும் என்பதற்காக, அவரை பார்க்க ராமசாமி பலமுறை பெங்களூருவுக்கு நேரில் சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் அத்தாயியை பார்க்க அவரை விடவில்லை. இது குறித்து, நாமக்கல் எஸ்பி அலுவலகம் மற்றும் நாமகிரிபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ராமசாமி புகார் மனு அளித்துள்ளார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த சில மாதமாக நித்யானந்தாவின் சீடர்களிடம் பேசி வந்த ராமசாமி, அத்தாயி நேரில் வந்து கையெழுத்து போட்டு விட்டுச் சென்றால் போதும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று பெங்களுருவில் இருந்து ஒரு காரில் அத்தாயி மற்றும் நித்தியானந்தாவின் சீடர்கள் 5 பேர், அய்யம்பாளையத்துக்கு வந்தனர். இதையறிந்த கிராம மக்கள், அந்த காரை மடக்கிப்பிடித்து, காரில் இருந்த நித்தியானந்தாவின் சீடர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரில் இந்த அத்தாயியை மீட்ட கிராம மக்கள், நித்யானந்தா சீடர்களை அடித்து விரட்டியடித்தனர். இதை கண்ட அத்தாயி ‘‘நான் இனிமேல் நித்யானந்தா ஆசிரமத்திற்கு செல்ல மாட்டேன். இங்கேயே தங்கி விடுகிறேன் என தெரிவித்தார். இதை தொடர்ந்து நித்யானந்தா சீடர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

Related Stories: