பத்மா சேஷாத்திரி பள்ளியை தொடர்ந்து சென்னை பி.எஸ். பள்ளியின் 3 ஆசிரியர்களிடம் விசாரணை: முன்னாள் மாணவி கொடுத்த புகாரில் வலுவான ஆதாரங்கள் உள்ளது; போலீசார் விசாரணை துவங்கினர்

சென்னை: வகுப்பு அறையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் படி, அந்த பள்ளியின் 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்த வரிசையில் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில், நான் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்தேன். அப்போது பள்ளி ஆசிரியர்களாக இருந்த சிவகுமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் ஆகியோர் தன்னிடம் வகுப்பு அறையில் மிரட்டி பல முறை தவறாக நடந்து கொண்டனர். எனவே சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் புகாரின் படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முன்னாள் மாணவியின் புகாரின்படி பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்களான சிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரனிடம் தனது விசாரணையை நேற்று தொடங்கினர்.

அதில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி அளித்த புகாரின்படி 3 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி பள்ளியில் படிக்கும் போது வீட்டிற்கு செல்லும் நேரத்தில், மாணவியை தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததும், அப்போது, மாணவியிடம் தவறாக நடந்த ஆசிரியர், தனது நண்பர்களான சக ஆசிரியர்களிடம் கூறி அடுத்தடுத்து 2 ஆசிரியர்கள் மாணவியை பல முறை பாலியல் தொந்தரவு செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் குறித்து அப்போதே தான் படித்த பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக தனது புகாரில் கூறியுள்ளார். அதனால் முன்னாள் மாணவியின் புகாரின் படி பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் தான் 3 ஆசிரியர்கள் கூட்டாக எத்தனை மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தனர் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: