விம்பிள்டன் டென்னிஸ்: பைனலுக்கு முன்னேறியதை நம்ப முடியவில்லை..! கரோலினா பிளிஸ்கோவா பேட்டி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. மகளிர் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தது. நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார். இதில் 6-3,7-6 என்ற செட் கணக்கில் ஆஷ்லி பார்டி வெற்றி பெற்று முதன்முறையாக விம்பிள்டன் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றிக்கு பின் 25 வயதான ஆஷ்லி பார்டி கூறுகையில், விம்பிள்டனில் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது நம்பமுடியாதது என்று நான் நினைக்கிறேன். கெர்பர் நம்பமுடியாத போட்டியாளர். சாம்பியன் வீராங்கனை. அவருக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனை என்னால் செய்ய முடிந்தது என நினைக்கிறேன், என்றார். மற்றொரு அரையிறுதியில், 8ம் நிலை வீராங்கனையான செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா( 29), 2ம் நிலை வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா (23)உடன் மோதினார்.

இதில் 5-7, 6-4, 6-4 என்ற செட்களில் பிளிஸ்கோவா வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். வெற்றிக்கு பின் பிளிஸ்கோவா கூறுகையில், இறுதி போட்டிக்கு முன்னேறியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. தொடரில் 2வது வாரத்திலும் இருக்கவேண்டும் என்பது தான் எனது கனவாக இருந்தது. இறுதி போட்டிக்கு செல்வேன் என ஒருபோதும் நினைத்ததில்லை, என்றார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ஆஷ்லிபார்டி- பிளிஸ்கோவா மோதுகின்றனர். இருவரும் இதற்கு முன் 7 போட்டிகளில் மோதியதில் 5ல் பார்டி, 2ல் பிளிஸ்கோவா வென்றுள்ளனர். கடைசியாக ஸ்டட்கர்ட் ஓபனில் மோதிய போட்டியில் பார்டி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. மாலை 6 மணிக்கு பெரெட்டினி (இத்தாலி)- ஹர்காக்ஸ் (போலந்து), இரவு 8 மணிக்கு ஜோகோவிச் (செர்பியா) - ‌ஷபோவலோவ் (கனடா) மோதுகின்றனர்.

Related Stories: