உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் கோஹ்லி - ரகானே ஜோடி பொறுப்பான ஆட்டம்

சவுத்தாம்ப்டன்: நியூசிலாந்து அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இந்திய அணி கேப்டன் கோஹ்லி - துணை கேப்டன் ரகானே இணைந்து 4வது விக்கெட்டுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2ம் நாளான நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 20 ஓவரில் 62 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ரோகித் 34 ரன் (68 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஜேமிசன் வேகத்தில் சவுத்தீ வசம் பிடிபட்டார்.

கில் 28 ரன் எடுத்து (108 பந்து, 3 பவுண்டரி) வேக்னர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வால்டிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 63 ரன்னுக்கு 2 விக்கெட் என இந்தியா திடீர் சரிவை சந்தித்தது. ஒரு முனையில் கோஹ்லி நம்பிக்கையுடன் விளையாட, 54 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன் எடுத்த புஜாரா ஆட்டமிழந்தது நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்திய அணி 40.2 ஓவரில் 88 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில், கோஹ்லி - ரகானே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது, இந்திய அணியின் ரன் குவிப்புக்கு மேலும் தடை போட்டது. 63வது ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி 40 ரன், ரகானே 28 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேமிசன், வேக்னர். போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories: