ஆண்டியப்பனூர் அணையில் ஆய்வு ₹4.6 கோடியில் பூங்கா, விடுதி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணை உள்ளது. இந்த அணை ஜவ்வாது மலையில் மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் அணையில் தேங்கி ஆண்டுக்கு பலமுறை நிரம்பி அருகே உள்ள பாம்பாருக்கு சென்றடையும். இந்த அணை திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணையாகும். 8 மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் வருடந்தோறும் தண்ணீர் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது 4.6 கோடி ரூபாய் மதிப்பில் அணை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சிறுவர் பூங்கா, நடைபாதை, உணவகம், விடுதிகள், உள்ளிட்டவைகள் கட்டப்பட்டு வருகிறது. சிறுவர்கள் விளையாட பூங்காக்களும், கேளிக்கை பொம்மைகளும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை நேற்று கலெக்டர் சிவன்அருள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் அணையில் தண்ணீர் எத்தனை கனஅடி உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடர்ந்து நடைபெறும் பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: