கண்ணில் போடும் சொட்டு மருந்துக்கு மட்டும் தற்காலிக நிறுத்தம்: கொரோனா லேகியத்துக்கு ஆந்திர அரசு அனுமதி

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ண பட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தய்யா. இவர் கண்டங்கத்திரிக்காய், எருக்கம் பூ, வால்மிளகு, திப்பிலி, மஞ்சள் உள்ளிட்டவற்றை கொண்டு ஆயுர்வேத மூலிகை மூலம் மருந்தை தயார் செய்து கொரோனா பாதிப்பை தடுக்க ஆறு வகையான லேகியம் தயார் செய்து இலவசமாக வழங்கி வந்தார். இந்த மருந்தை வாங்க ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் முத்துக்கூறு கிராமத்திற்கு செல்லத் தொடங்கியதால் மருந்து வாங்குவது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஆயுர்வேத மருந்தினை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா? என்பது குறித்தும் இந்த மருந்துக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆந்திர மாநில அரசு ஆய்வு செய்தது. தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகமும் ஆனந்தய்யா லேகியத்தை சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு நேற்று ஆயுஷ் அமைச்சகம் அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், ஆனந்தய்யா வழங்கி வந்த ‘‘கே’’ என்ற மருந்துகளை ஆய்வுக்குழுவுக்கு அவர் சமர்பிக்கவில்லை. எனவே, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனந்தய்யா கொடுத்த பி, எல், எப் ஆகிய மருந்துகளுக்கு மத்திய ஆயுஷ் ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் (சி.சி.ஆர்.ஏ.எஸ்) அனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின்படி, செயற்கை சுவாசம் பயன்படுத்தும் கொரோனா நோயாளிகளுக்கு கண்களில் ஊற்றும் சொட்டு மருந்துக்கான சோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு வாரங்களில் வர வேண்டி உள்ளதால் அதனை தவிர்த்து மற்ற லேகியத்திற்கு அனுமதி வழங்குவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. தலைமை ஆசிரியர் சாவு: ஆயுர்வேத சொட்டு மருந்து செலுத்திய 15 நிமிடங்களில் செயற்கை சுவாசம் இல்லாமல் முழு குணம் அடைந்ததாக கூறிய முன்னாள் தலைமை ஆசிரியர் கோட்டய்யாவுக்கு 2 நாட்களில் கொரோனா இல்லை என்று பரிசோதனை மூலம் தெரிய வந்தது. ஆனால், தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று இறந்தார்.

வரும் 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திராவில் கொரோனா தொற்றால் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கை 10ம் தேதி வரை ஆந்திர அரசு நேற்று நீட்டித்து உத்தரவிட்டது. சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 15ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: