அணியில் இடம் கிடைக்காத 18 மாதங்கள் தூக்கமில்லாத இரவுகளால் நிறைந்திருந்தது: ரவீந்திர ஜடேஜா பேட்டி

மும்பை: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்காக பிரத்யேகமான ஸ்வெட்டருடன் உள்ள படத்தை பகிர்ந்துள்ளார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டில் இருந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் அணியில் இடம் கிடைக்காதபோது ஏற்பட்ட மனநிலை குறித்து பகிர்ந்துள்ளார். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், 2018ம் ஆண்டு எனக்குச் சோதனையான வருசம் தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் என்னால் தூங்கக் கூட முடியவில்லை. 4-5 மணி வரை விளித்திருந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன். படுத்த நிலையில்தான் இருப்பேன். ஆனால் தூக்கம் வராது. அந்த காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம்பெற்றாலும், ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்காது. இதனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியால் போனது.

இந்திய அணியில் எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2018ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 160/6 எனத் திணறிக்கொண்டிருந்தபோது, நான் 86 ரன்கள் எடுத்தேன். அப்போட்டி முடிந்தபிறகு பேசிய ரவி சாஸ்திரி, ஜடேஜா தான் ஒரு ஆல்-ரவுண்டர் என நிரூபித்துவிட்டார். அவரால் எங்கு வேண்டுமானாலும் விளையாட முடியும் எனத் தெரிவித்திருந்தார். அந்த ஒரு போட்டிதான் என் வாழ்க்கையை மாற்றியது. அதுவரை வாய்ப்பு கிடைக்காமல், பார்மை இழந்து காணப்பட்டேன். அப்போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான மனநிலையில் இருந்தேன். இதனால்தான் அப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட முடிந்தது. தொடர்ந்து உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டேன். ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டதால் ஒருநாள் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தற்போது மூன்றுவிதமான கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன் என்றார்.

இந்திய அணியில் உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைவரும் ஒரே வயதுடையவர்கள், 19 வயதிற்குட்பட்ட நாட்களில் இருந்து ஒன்றாக விளையாடியுள்ளோம். இப்போது அனைவரும் குடும்பஸ்தன். எனவே நாங்கள் முன்பு பழகிய அளவுக்கு அதிக நேரத்தை செலவிடமாட்டோம். இப்போது நாங்கள் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிடுகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எங்கள் குடும்பங்கள் எங்களுடன் பயணம் செய்கின்றன, என்றார். திருமணம் உங்களை எவ்வளவு மாற்றிவிட்டது? என்ற கேள்விக்கு நிறைய இப்போது ஒரு பொறுப்பு வந்துவிட்டது. வீட்டில் நான் என் மகளை கவனித்துக்கொள்கிறேன். வீட்டில் இருக்கும்போது, ​​வீடு தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்கிறேன், என்றார்.

Related Stories: