குஜராத் போர்பந்தர்-மஹூவா இடையே டவ்தே புயல் கரையை கடந்தது: 185 கிமீ வேகத்தில் சூறைக்காற்று; மும்பையில் கனமழைக்கு 6 பேர் பலி

மும்பை: குஜராத் மாநிலம் போர்பந்தர்  மஹூவா இடையே டவ்தே புயல் நேற்று இரவு கரையை கடந்தது. அப்போது மணிக்கு 185 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயலால் மும்பையில் ஏற்பட்ட கனமழைக்கு 6 பேர் பலியாயினர். அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிரமாக வலுப்பெற்று குஜராத் நோக்கி நகர்ந்தது. புயல் காரணமாக கேரளா, தமிழகம், கர்நாடகா, கோவா மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தநிலையில், நேற்று இரவு கரையை கடப்பதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை மகாராஷ்டிரா அருகே புயல் நகர்ந்ததால், மும்பை, தானேயில் கனமழை பெய்தது. மும்பையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் கடும் காற்றால் கூரைகள் பறந்தன. கடல் சீற்றமும் மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டன. பாந்த்ரா வோர்லி சீ லிங்க் சாலை மூடப்பட்டு, அந்த வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. கனமழைக்கு கொங்கன் மண்டலத்தில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். ராய்க்காட்டில் 3 பேர், சிந்துதுர்க்கில் ஒருவர், நவி மும்பையில் 2 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் புயல் இரவு கரையை கடக்கும் என்பதால், அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர்.

குஜராத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக 1.5 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 54 குழுவினர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போர்பந்தர் மருத்துவமனையில் ஐசியு வார்டில் இருந்த 17 கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் தல்வார் ஆகிய போர்க்கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில், இரவு 8.50 மணிக்கு புயல் குஜராத் கடலோர பகுதியை எட்டியது. போர்பந்தர் - மஹூவா பகுதிக்கு இடையே சுமார் 2 மணி நேரமாக புயல் கரையை கடந்தது. போர்பந்தர், அம்ரேலி, ஜுனாகர், கிர் சோம்நாத், போதத் மற்றும் அகமதாபாத்தின் கடலோரப் பகுதிகளில் புயலால் அதிக அளவில் சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

மிக பயங்கரமான புயல்

கடந்த 1998ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட புயலைக் காட்டிலும் டவ்தே அதிக வலுவானது என கூறப்படுகிறது. 1998ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் 1,173 பேர் பலியாயினர். 1,774 பேர் மாயமாயினர் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முன்னணி பத்திரிகைகளில் சுமார் 4,000 பேர் வரை புயல், கனமழையால் இறந்திருக்கலாம் என கூறியுள்ளன. கணக்கிடலங்காதோர் காணாமல் போயிருப்பதாகவும் அப்போது கூறப்பட்டது.

Related Stories: