கொல்கத்தா: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்றவர்களாகக் கருதப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குழுவினர் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, கொல்கத்தாவில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு வெளியே பா.ஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், அங்கிருந்த காவல்துறை மற்றும் பாஜ தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தைப் பாதுகாப்பதற்காக அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த மத்தியப் படை வீரர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், மூத்த காவல்துறை அதிகாரிகளான மத்திய மண்டல துணை ஆணையர் ஒய்.எஸ். ஜகந்நாத் ராவ் மற்றும் கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னதாகவே, அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பா.ஜவினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினர் தலையிட்டனர்; இது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட வழிவகுத்தது.
