புதுடெல்லி: 2014 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலத்தில் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதல்வராக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அமராவதியே மாநிலத்தின் தலைநகராக இருக்கும் என்று அறிவித்து இருந்தார். 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசு, அமராவதியில் ஒரே தலைநகரம் அமைப்பதற்கு பதிலாக மூன்று தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானார். இதனை தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி என்ற பெயரை சேர்ப்பதற்காக ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் பிரிவு 5ல் திருத்தம் செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி மாநில சட்டமன்றம் கடந்த மார்ச் 28ம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை அடுத்து ஆந்திரப்பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் இன்று தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் மூலமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய மாநில அரசு செய்ததை போல அமராவதியை ஒரே மற்றும் நிரந்தர தலைநகர் என்ற நிலையில் இருந்து எதிர்காலத்தில் மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் இந்த சட்ட மசோதா தடுத்து நிறுத்தும். இந்த மசோதா மூலமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் முக்கிய விருப்பம் நிறைவேற்றப்படுகின்றது.
