மேற்குவங்க அதிகாரிகள் இடமாற்றம் எதிர்ப்பு மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. குறிப்பாக மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்த பின்னர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட பல அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது மாநில நிர்வாகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்று மனுதாரர் வாதிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரினார்.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமர்வு, ‘ தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளை தன்னிச்சையாக இடமாற்றம் செய்ததன் விளைவாக பொது நலனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டது என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை. இதனால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. எங்கள் பார்வையில், எந்தவொரு பொது பாதிப்பையும் ஏற்படுத்தாத இடமாற்ற உத்தரவுகளின் சட்டப்பூர்வத்தன்மை, செல்லுபடியாகும் தன்மை மற்றும் பொருத்தத்தை ஒரு பொதுநல வழக்கில் ஆராய முடியாது.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உள்நோக்கம் குறித்த எந்தவொரு குற்றச்சாட்டையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. வெற்று வாதங்களைத் தவிர, அத்தகைய தொடர்பை நிறுவ வேறு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகளை இடமாற்றம் செய்ததால், அந்த நடவடிக்கை தன்னிச்சையானது, மனம்போன போக்கானது அல்லது உள்நோக்கம் கொண்டது என்று கூறிவிட முடியாது. குறிப்பாக, நாடு தழுவிய அளவில் இதேபோன்ற அல்லது இதைவிட அதிகமான அதிகாரிகளின் இடமாற்றங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த புகார் பொருந்தாது ’ என்று தெரிவித்தனர்.

Related Stories: