கவுகாத்தி: அசாம் பா.ஜ தேர்தல் அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜவின் தேர்தல் அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். பூர்வகுடி மக்களின் நிலம், பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு முதலீட்டை மேற்கொள்ளவும் இந்த தேர்தல் அறிக்கையில் 31 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
* சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து வெளியேற்றும் செயல்முறையைத் துரிதப்படுத்தும் வகையில் குடியேறிகள் (அசாமில் இருந்து வெளியேற்றுதல்) சட்டம், 1950’-ஐ அமல்படுத்துவதன் மூலம், அசாமின் பூர்வகுடி மக்களின் நிலம், பாரம்பரியம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படும்.
* அசாம் மாநிலத்தில் ஆறாவது அட்டவணை மற்றும் பழங்குடியினப் பகுதிகளைத் தவிர்த்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பல்வேறு இனச் சமூகங்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும்.
* ‘மிஷன் பசுந்தரா’ திட்டத்தின் கீழ், ‘‘சட்டவிரோத குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்து, உண்மையான குடிமக்கள் அனைவருக்கும் நில உரிமைகள் வழங்கப்படும்.
* சத்ராக்கள் (மடங்கள்), நாம்கர்கள், தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கப்படும்.
* ‘லவ் ஜிஹாத்’ அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பயனுள்ள சட்டத்தை உருவாக்கப்படும்.
* ‘நில ஜிஹாத்’ அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
* அசாம் மாநிலத்தை இந்தியாவின் ‘கிழக்கு நுழைவாயிலாக’ நிலைநிறுத்தும் வகையில் ரூ. 5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்
* ‘அசோம் கதி சக்தி முதன்மைத் திட்டத்தின்’ துணையுடன், சாலை, வான்வழி, நீர்வழி மற்றும் ரயில்வே திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படும்.
* தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்த தகுதிவாய்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் நிலப் பட்டாக்கள் வழங்குவதன் மூலமும், ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீடுகள் கிடைப்பதை உறுதி செய்யப்படும்.
* ஏற்கனவே வீடு வைத்திருந்து நிலப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு வீட்டின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக ரூ. 75,000 வழங்கப்படும்.
* ஊதியத்தை படிப்படியாக உயர்த்தி ரூ. 500 ஆக உறுதி செய்வதன் மூலமும், ‘தேயிலைப் பழங்குடியின’ சமூகங்களின் முழுமையான வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
* அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக, ரூ. 18,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் ‘பாத் முக்த் அசாம் இயக்கம்’ (வெள்ளமில்லா அசாம் இயக்கம்) அறிமுகப்படுத்தப்படும்.
* புதிதாக 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். பல்வேறு திட்டங்கள் மூலம் அதிக தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கப்படும்.
* ‘அருணோதய்’ திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை, தற்போதுள்ள ரூ. 1,250-லிருந்து படிப்படியாக உயர்த்தி ரூ. 3,000-ஆக அதிகரிக்கப்படும்.
* ‘புரோட்டான் சிகிச்சை’ மூலம் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்க ரூ. 50,000 கோடி முதலீடு செய்யப்படும்.
* அசாமில் தரமான உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக, ‘ஒரு மாவட்டம் – ஒரு பல்கலைக்கழகம்’ என்ற திட்டமும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் விரிவான அளவில் அமைவது உறுதி செய்யப்படும்.
* தகுதிவாய்ந்த ஒவ்வொரு சிறு மற்றும் குறு விவசாயிக்கும் ஆண்டுதோறும் ரூ. 11,000 நிதியுதவி கிடைப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
