யாருக்கு எந்தெந்த படிவம்? வருமான வரி தாக்கலுக்கான ஐடிஆர் படிவங்கள் அறிவிப்பு: கடைசி தேதி ஜூலை 31

புதுடெல்லி: வருமான வரித்துறை 2026-27ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி தாக்கல் படிவங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி படிவங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி 2025-26ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வரி கணக்கை தாக்கல் செய்யத் தொடங்கலாம். தனிநபர்கள், தங்கள் கணக்கை தணிக்கை செய்யத் தேவையில்லாதவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் ஜூலை 31 ஆகும்.
யாருக்கு எந்த படிவம்:

மொத்தம் 7 விதமான ஐடிஆர் படிவங்கள் உள்ளன. இதில் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகியவை எளிமையான படிவங்களாகும். இவை பெருமளவில் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெறும் தனிநபர்கள், ஒரு சொந்த வீடு வைத்திருப்போர், ஆண்டுக்கு ரூ.5,000 வரையிலான வட்டி உள்ளிட்ட பிற வருவாய் மூலங்கள் மற்றும் விவசாய வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் 1 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

மொத்த ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ள தொழில் செய்வோர், இந்து கூட்டு குடும்பம் (எச்யுஎப்) மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் ஐடிஆர்-4 படிவம் தாக்கல் செய்ய வேண்டும். வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் இல்லாதவர்கள், ஆனால் மூலதன ஆதாயம், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அல்லது வெளிநாட்டுச் சொத்துகள் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் எச்யுஎப்கள் ஐடிஆர்-2 படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் அல்லது நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருந்து ரூ.50 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் எச்யுஎப்கள் ஐடிஆர்-3 படிவம் தாக்கல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் எல்எல்பி நிறுவனங்களுக்கு ஐடிஆர்-5 படிவமும், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஐடிஆர்-6 படிவமும், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஐடிஆர்-7 படிவமும் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், முந்தைய ஆண்டுகளில் வரித் தாக்கலில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்திக் கொள்ள ஐடிஆர்-யு படிவம் உதவுகிறது.

Related Stories: