புதுடெல்லி: கிராமப்புற குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ஜல் ஜீவன் திட்டத்தினை (ஜேஜேஎம்) 2028ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை கடந்த மாதம் 10ம் தேதி ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 15.80 கோடி வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி ஜேஜேஎம் 2.0 எனப்படும் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் கீழ், மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.8.69 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேம்பட்ட சேவை வழங்கல் தரநிலைகள், நிலைத்தன்மைக்கான நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற குடிநீர் விநியோக அமைப்புகளின் சமூகத்தால் வழிநடத்தப்படும் மேலாண்மை உள்ளிட்ட ஜேஜேஎம் 2.0 திட்டத்தின் முக்கிய சீர்த்திருத்தங்களை செயல்படுத்த உறுதி அளித்த 5 மாநிலங்களுக்கு 2025-26ம் நிதியாண்டிற்காக ரூ.1,561.53 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதன்படி, உபிக்கு ரூ.792.93 கோடியும், சட்டீஸ்கருக்கு ரூ.536.53 கோடியும், மபிக்கு ரூ.154.02 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.65.31 கோடியும், மகாராஷ்டிராவிற்கு ரூ.12.74 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
