ஒன்றிய அரசு உயர் அதிகாரிகள் மாற்றம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு உயர்மட்ட அளவிலான நிர்வாக அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த சஞ்சல் குமார் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே செயலாளராக இருந்த சஞ்சய் ஜாஜூ வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய செயலாளராக பொறுப்பேற்றார்.

சுரங்கத்துறை கூடுதல் செயலாளராக இருந்த சஞ்சய் லோஹியா நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறையின் சிறப்பு செயலாளராகியுள்ளார். நிதிச் சேவைகள் துறையின் தற்போதைய செயலாளரான நாகராஜூ மத்திராலா மே 31ம் தேதி பணி ஓய்வு பெற்ற பின் சஞ்சய் லோஹியா பொறுப்பேற்பார். தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்தஅபிஷேக் சிங், கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான புவனேஷ்குமார் புதிய சுற்றுலா துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவராக மூத்த அரசு அதிகாரி வீர் விக்ரம் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக புனீத் கன்சல், மத்திய தகவல் ஆணையத்தின் செயலாளராக விஷால் ககன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: