விராலிமலை தொகுதி பிரசாரம் திமுக வேட்பாளருக்கு இடையூறு அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்றுமுன்தினம் இறுதி கட்ட பிரசாரம் நடந்தது. திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். திமுகவினருக்கு மாலை 5 முதல் 6 மணி மணி வரையும், அதிமுகவினருக்கு 6முதல் 7 மணி வரையும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் மாலை அதிமுகவினர் சார்பில் விராலிமலை செக்போஸ்ட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாலை 5.40 மணி அளவில் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் செக்போஸ்ட்டில் பிரசாரம் மேற்கொள்ள வந்தபோது கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்ததால் பிரசாரம் தடைபட்டது. இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பிரசாரத்தை முடித்து கொண்டு திமுக வேட்பாளர் இலுப்பூருக்கு சென்றார்.

இந்நிலையில் திமுக வேட்பாளரை பிரசாரம் செய்யவிடாமல் அதிமுகவினர் இடையூறு செய்தது குறித்து வேட்பாளர் பழனியப்பனின் வக்கீல் செல்லதுரை விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: விராலிமலை தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக திமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், அதிமுக கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இது வேட்பாளர் பழனியப்பன் வாக்கு சேகரிக்க தடையாக இருந்தது. மேடையில் இருந்த அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வன்முறை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக விராலிமலை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: