தங்கவயல் அரசு முதல் நிலை கல்லூரி தேசிய மதிப்பீட்டு அங்கீகார ஆய்வுக்கு தேர்வு

தங்கவயல்: தங்கவயல் அரசு முதல் நிலை கல்லூரி என் ஏ ஏ சி. எனப்படும் தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தர சான்று ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  தங்கவயலில் கடந்த 2007ம் ஆண்டு அரசு முதல் நிலை கல்லூரி  தொடங்கப்பட்டது. இங்கு வணிகம், கலை, அறிவியல், மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளும் மொத்தம் 1628 மாணவர்களுடன் கடந்த 13 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. மாணவர்களின் தேர்ச்சி மற்றும் அவர்கள் பெறும் மதிப்பெண், கல்லூரி  நிர்வாக செயல்பாட்டு திறன், கல்வி தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அளவில் சிறந்த கல்லூரியாக திகழும் கல்லூரியை மாநில கல்லூரி கல்வி ஆணையம் தர சான்றிதழ் வழங்குகிறது. அதை ஆய்வு செய்யும், தேசிய மதிப்பீடு  மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஏ.ஏ.சி)  சிறந்த கல்லூரிக்கு அதை உறுதி செய்து அங்கீகாரம் வழங்குகிறது.

அதன் படி இந்த அங்கீகாரம் பெறுவதற்கான ஆய்வுக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள 400 அரசு கல்லூரிகளில் ஆறு அரசு கல்லூரிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆறு அரசு கல்லூரிகளில் தங்கவயல் முதல் நிலை கல்லூரியும்  ஒன்று. இது குறித்து தங்கவயல் முதல் நிலை கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது,”திறமையான ஆசிரியர்கள், சிறந்த கல்வி,  கூடுதலான மாணவர்கள் தேர்ச்சி என்ற செயல் பாட்டுடன் தங்கவயல் முதல் நிலை கல்லூரி  சிறப்பாக இயங்கி வருகிறது. மாநில தர சான்று அங்கீகார பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்தால் அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு வழங்கும். அதில் மேலும் கல்லூரிக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி  மாணவர்களுக்கு முதல் தர கல்வியை வழங்க முடியும்”என்றார்.

Related Stories: