ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் யூ.டி.எஸ் செயலி இன்று முதல் செயல்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: டிக்கெட் கவுன்டரில் கூட்ட நெரிலை குறைப்பதற்காக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் யூ.டி.எஸ் செயலி இன்று முதல் மீண்டும் செயல்படும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதனால் டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் எடுக்க அதிகளவு கூட்ட நெரிசலை காணலாம். மேலும் டிக்கெட் எடுக்க காலதாமதமும் ஆகிறது. இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ‘யூ.டி.எஸ்.’ செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியும் நிறுத்தப்பட்டது.

தற்போது வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், மீண்டும் ‘யூ.டி.எஸ்’ செயலியின் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரயில்வே கொண்டு வந்துள்ளது.அந்தவகையில் இன்று  முதல் பயணிகள் கவுன்டர்களுக்கு செல்லாமல் ‘யூ.டி.எஸ்’ செயலி மூலம் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த டிக்கெட்கள் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் உள்ள பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம். இதில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது. இந்த செயலி வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த ஒரு மணி நேரத்துக்குள், பயணிகள் தங்களது பயணத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: