அமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி:  அமைச்சரின் போராட்டத்தை தொடர்ந்து 17 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதியளித்திருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலம் எந்த வகையிலும் வளர்ச்சி பெறக்கூடாது என கவர்னர் செயல்பட்டு வருகிறார். அவரை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ளாமல் ஆணவப் போக்கோடு செயல்பட்டு வருகிறார். மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து அமைச்சர் கந்தசாமி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினார். தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதி, அமைச்சரை சந்திக்காமல் சர்வாதிகாரிபோல  நடந்து கொண்டார்.

அமைச்சரின் போராட்டத்தை தொடர்ந்து தற்போது 36 கோப்புகளில் 17 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக தலைமை செயலர், நிதி செயலரை அழைத்து பேசினோம். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு கட்டும் திட்டம், கிருமாம்பாக்கம் ரூ.5 கோடியில் பல்நோக்கு சமுதாய கூடம் கட்டுவதற்கான முதல்நிலை நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை காலத்தோடு செய்திருந்தால், அமைச்சர் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்மை செய்வதாக நினைத்தால், அவர் புதுச்சேரியை விட்டு காலி செய்து கொண்டு கிளம்ப வேண்டும் என்றார்.

Related Stories:

>