அந்தியூர்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை அந்தியூர் தேர்வீதியில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி தலைமையில், வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி பெற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி கூட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி மீதும், அந்தியூர் தொகுதி நாதக வேட்பாளர் ஆனந்தி மீதும் அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
