தமிழ் சிறுகதையின் தடங்கள் எனும் புத்தகத்திற்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

 

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்கு 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2024ல் சிறுவர் இலக்கியத்திற்காக விருது பெற்ற நிலையில், தற்போது முதன்மை சாகித்ய அகாடமி விருதையும் அவர் பெற்றுள்ளார்.

1954ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம் – சரஸ்வதி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தமிழ்ச்செல்வன். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், ராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் என மாறி மாறி பணியாற்றினார். எழுத்தாளர் கோணங்கி, நாடகவியலாளர் ச.முருகபூபதி ஆகியோர் இவரது சகோதரர்கள் ஆவர்.

கோவில்பட்டியில் இருந்து வெளியான நீலக்குயில் என்ற சிறுபத்திரிகையில் இவரது முதல் கவிதை ‘‘ஒருநாள் டைரி’’ 1972ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவர், பின்னர் சிறுகதை எழுதத் தொடங்கினார். 1978ம் ஆண்டில் முதல் சிறுகதையான திரைச்சுவர்கள் தாமரை இதழில் வெளிவந்தது. தொடர்ந்து கதைகள் எழுதினார். முதல் கதைத் தொகுப்பு வெயிலோடு போய் 1984ம் ஆண்டில் வெளிவந்தது. அசோகவனம், வெயிலோடு போய் சிறுகதைகள், பூ என்ற திரைப்படத்தின் மூலக்கருவாகின. இத்திரைப்படத்திற்காக தமிழக அரசு 2008ம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியர் விருதை இவருக்கு வழங்கியது.

படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக் கொண்டு முழு நேரமும் விழிப்புணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளத்தாயுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

* விருது பெற்ற நூலின் சிறப்புகள்

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலை சாகித்ய அகாடமி விருதுக்காக தேர்வு செய்ய பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன. இந்நூல் 1913ல் வ.வே.சு. ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதையில் தொடங்கி, 1970 வரையிலான தமிழ்ச் சிறுகதையின் முதல் 50 ஆண்டுகால வரலாற்றை முழுமையாகப் பேசுகிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் தொடங்கி 57 முக்கியமான சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகளை, அவர்களின் சமூகப் பின்னணியோடு இந்நூலில் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.

தமிழ்ச் சிறுகதைகளை மணிக்கொடி-எழுத்து, வெகுஜன இதழ்கள், இடதுசாரி சிந்தனை, திராவிட இயக்கம், தலித்தியம் மற்றும் பெண் எழுத்தாளர்கள் என 6 முக்கிய நீரோட்டங்களாகப் பிரித்து இந்நூல் வகைப்படுத்துகிறது. வெறும் இலக்கியத் திறனாய்வு மட்டுமல்லாமல், ஒரு படைப்பு உருவான காலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சூழலையும் இந்நூல் வாசகர்களுக்குக் கடத்துகிறது.

* முதல்வர் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் ‘தோழர்’ ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்! தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: