மதுரை: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் விசாரணை சரியான முறையில் செல்கிறது, எனவே பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் மாரீஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘மாணவி கொலை தொடர்பாக சந்தேகத்திற்கிடமான 5 பேரிடம் டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இவை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வர வேண்டியுள்ளது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘விசாரணை சரியான முறையில் செல்கிறது. பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 2க்கு தள்ளி வைத்தனர்.
