பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்ரல் 9ம் தேதி தொடங்கும்

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 9ம் தேதி தொடங்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் 45 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 27 ஆயிரம் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் நடக்கிறது. தற்போது 4 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் இன்று நடக்கிறது. வரும் 23 மற்றும் 26ம் தேதிகளிலும் தேர்வு நடந்து முடியும்.

இதையடுத்து, அனைத்து விடைத்தாள்களும் 28ம் தேதி மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு பெறப்பட்டு, அங்கு டம்மி விடைத்தாள்கள் முகப்பு ஒட்டப்பட்டு, ஏப்ரல் 4ம் தேதி 40க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. திருத்தும் மையங்களில் ஏப்ரல் 8ம் தேதி முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்துவர். ஏப்ரல் 9ம் தேதி உதவித் தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அதற்கு பிறகு முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த தொடங்குவார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகளை மே மாதம் முதல் வாரத்தில் முடிக்கவும், மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

Related Stories: