சட்டமன்ற தேர்தல் எதிரொலி கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை; இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உத்தரவு

சென்னை: சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய எஸ்பிக்கள் இன்று காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்டங்களில் பதவியேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் அமலில் உள்ளது.

அதேநேரம், தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் டிஜிபி பீயுஷ் பாண்டே மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுப்ரிதம் சர்கார் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்பிக்களை முதற்கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் லதா திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட எஸ்பியாக ஹரிகிரண் பிரசாத், ஈரோடு மாவட்ட எஸ்பியாக கிரண் ஸ்ருதி, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக சுஜித்குமார், விருதுநகர் மாவட்ட எஸ்பியாக நாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 எஸ்பிக்களும் இன்று காலை 11 மணிக்குள் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்க வேண்டும். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட 4 அதிகாரிகள் தேர்தல்கள் முடிவு வரை தேர்தல் தொடர்பான எந்த பதவிகளிலும் நியமிக்கப்படமாட்டர்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: